Sunday, November 25, 2018

ஐய்யனார்

ஊரை காக்க 
ஊர் வாசலில்
நின்ற ஐய்யனார்
இன்று
அடுக்குமாடிகளுக்கு
நடுவில் !!
கொடை கோழி,ஆடு
மேய இடமில்லை
நெல் அறுத்த களமில்லை
பொங்கல் அடுப்பு கட்ட
சிறு கல்லில்லை
கட்டாந்தரையில்
கார்களின் அணிவகுப்பு !!
கேஸ் அடுப்பு சிலிண்டரோடு
காஸ்ட்லி அரிசியில்
பொங்கல் !!
நல்லவேளை ஐய்யனாருக்கு
இன்னும் வேட்டி தான் உடை
ஜீன்ஸில்லை !!
வளர்ச்சி ?!!

மாடு மேய்கிறேன் !!

ஒழுங்காக
படிக்காட்டி
ஆடு,மாடு தான்
மேய்க்கணும் - அம்மா அன்று !!!
ஆடு,மாடு,கோழி
மேய்ந்த
மந்தை வெளி
தேடி அலைகிறது
தார் சாலையில் !!
கால்வாயில்
கால் நனைத்து
கம்பங்கஞ்சி தூக்கோடு
கடலை முடிச்சோடு
ஆடு,மாடு
மேய்த்த நானும்
இன்று
தார் சாலையின்
நடுரோட்டில்
மாடுகளை
மேய்கிறேன் 
காரில் இருந்தபடி !!
நல்லா தானே
படிச்சேன் ?!!
அப்புறம் ஏன் ?!!

எதிர் வீட்டு பெண்!!

எப்போதும் நட்புடன் 
செல்போன் பேச்சு
தம்பியுடன் சண்டை
தகப்பனிடம் செல்லம்
தாயிடம் அதிகாரம்
அத்தனையும் மாறி
போனது இப்போது !!
அம்மாவை அடிக்கடி
தேடி கொள்கிறாள்...
தகப்பன் எப்படி என
தாயிடம் கேட்டறிகிறாள்...
தம்பியை வாசல் வந்து
வழியனுப்புகிறாள்...
காய்கறி காரனிடம்
கனிவுடன் பேரம்...
அத்தனையும் மாறியது
அடுத்த மாதம் கல்யாணம்
ஊரும் மாறிடுமோ ?!!
எதிர் வீட்டு பெண் !!

Wednesday, December 1, 2010

மௌனமே...

மலையில் மேகம் உரசுகையில்...
மொட்டு மலர்கையில்...
உயிர் பெற்ற பிள்ளை
உலகை வந்ததறிந்து அழும் முன்
முதல் நொடியில்...
இரயில் ஓடா தண்டவாளம் தொட்டு
செல்லும் தென்றலில்...
ஆயிரம் அர்த்தம் அடக்கிய
ஆளில்லா திண்ணைகளில்...
அளந்த ஆனந்தம்
அடங்கிபோனதடி  உன் மௌனத்தில்..

Monday, November 8, 2010

பத்தாவது மாடியில் இருந்து....

வண்டி புகை தாண்டி
வானத்தின்  நிஜவாசம் வேண்டி


சத்த சாம்ராஜ்யத்தில்  இருந்து  ஒழிந்து
மௌன கீதம்  ருசிக்க


தேடி  கண்டறிந்து  குடிபுகுந்தேன்
எட்டாத  மாடியில்

மறந்துவிட்டேன் ஒன்றை மட்டும்
மின்சாரம்  போனதென்றால் என்
நினைப்பு  மாறிபோகும் என

உயர்ந்த  வாழ்க்கையை தவறி புரிந்தேன் என